agatiyar

agatiyar
agatiyar

Thursday, July 21, 2011

அகத்தியர் தனிக்கோவில்

சிவபெருமான் கயிலையங்கிரியில் உமாதேவியை மணந்த போது, அனைத்து தேவர்களும் அங்கு கூடி நிற்க கயிலை தாழ்ந்து தென்னாடு உயர்ந்தது. அதனை சமப்படுத்த இறைவன் அகத்தியரை தென் னாட்டிற்கு அனுப்பி வைத்த கதை நாம் அறிந்ததே!

தென்னாட்டிற்கு உமையம்மையுடன் வந்து தன் திருமணக் காட்சியை அகத்தியருக்கு அருளுவதாகவும் கூறினார் சிவபெருமான். அதன்படி அகத்தியரும் தென்னாட்டிற்கு வந்து பல தலங்களைத் தரிசித்து, கடைசியில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் பொதிகை மலையில் வந்து தங்கித் தவம் செய்தார் என்று கந்த புராணம் கூறுகிறது. பாபநாசம் உட்பட பல தலங்களில் இறைவன் திருமணக் காட்சி அருளியுள்ளார். இப்பொழுதும் அகத்தியர் பொதிகை மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது.

பொதிகை மலை இருக்கும் பகுதியான அம்பாசமுத்திரமும் அதனைச் சுற்றியுள்ள பல இடங்களும் முத்தமிழிலும் புலமை பெற்ற தமிழ் முனிவர் அகத்தியருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். இவர் பல திருக்கோவில் களில் சிவபெருமானை லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம் உண்டு. இதற்குச் சான்றாக தமிழகத்தில்- குறிப்பாகத் தென் மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த கற்றளி (கருங்கல் கோவில்) சிவாலயங்களில் அகத்தியரின் திருவுருவச் சிலைகளை நாம் காணலாம். அகத்தியர் தனியாக அல்லது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவதாக வடிக்கப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும். இதிலிருந்து அகத்தியருக்கும் தமிழ் நாட்டிற்கும் ஏற்பட்ட தொன்மைத் தொடர்பை நாம் அறியலாம்.

இமயமலையிலிருந்து அகத்தியர் பாண்டி நாட்டுக்கு வந்து பாண்டிய மன்னர்களுக்கு குலகுருவாக விளங்கினார் என்ற செய்தி, கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட சின்னமனூர் செப்பேடுகளில்- வடமொழிப் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காளிதாசர் எழுதிய ரகுவம்சத்திலும் "அகத்தியரின் சிஷ்யன் பாண்டியன்' என்னும் குறிப்பு உள்ளது. இவற்றால் அகத்தியருக்கும் பாண்டிய ருக்குமுள்ள தொடர்பும் நமக்கு நன்கு புலனாகிறது.

இத்தனை பெருமை வாய்ந்த அகத்தியருக்கு அவரது மனைவி லோபமுத்திரையுடன் ஒரு கோவில் அம்பாசமுத்திரம் பிரதான கடை வீதியில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த சந்நிதியில் அகத்தியப் பெருமான் காட்சி தருகிறார். தனிச் சந்நிதியில் லோபமுத்திரை தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். ஆலய முகப்பில் நந்தி, கொடி மரம் ஆகியவை உள்ளன. கருவறையின் வலப்புறம் இருவரின் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. தென்புறம் தனிச் சந்நிதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கே அகத்தியர், லோபமுத்திரையின் அழகிய பெரிய உற்சவத் திரு வுருவங்களும் செப்புப் படிமத்தில் காட்சியளிக்கின்றன.

அடுத்து நடராஜர்- சிவகாமியின் அழகிய பெரிய செப்புப் படிமங்களும் உள்ளன. கன்னி மூலை விநாயகரும் உள்ளார். கிழக்கே உள்ள பெரிய வெளி மண்டபத்தின் முன்புறம் அகத்தியரின் சுதை உருவம் உள்ளது. இவருக்கும் சிறப்பு வழிபாடுகள் உள்ளன. அகத்தியருக்கென்று ஏற்பட்ட ஒரே கோவில் என்ற பெருமை உடையது இந்தக் கோவில்.

கருவறையில் அகத்தியர் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் ஏடு ஏந்தியுள்ளார். கழுத்தில் லிங்கத்துடன் மாலை, ஜடாமகுடம், மார்பில் பூணூல், மீசை, தாடியும் அமைந்துள்ளது. அகத்தியரின் தேவி லோபமுத்திரை இரு கரங்களுடன் வலக்கரத்தில் மலர் ஏந்தியுள்ளார். அகத்தியர் தென் தமிழ் நாட்டுக்கு வரும்போதே மணம் புரிந்து கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு சித்தர் என்னும் பெயர் கொண்ட மெய்யறிவு வாய்ந்த புலவர் பிறந்த தாகவும் கூறுவர்.

இந்த அகத்தியர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்னம் படைத்தல் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள், அவரவர் வீடுகளிலிருந்து சோறு பொங்கி எடுத்து வந்து கோவிலில் உள்ள ஒரு அறையில் அதைக் குவித்து வைத்து மூடிவிடுகின்றனர். மறுநாள் காலை அந்த அறையைத் திறந்து பார்த்தால் உணவுக் குவியலில் காலடித் தடம் காணப்படுகிறது. தனக்குப் படைத்த உணவை அகத்தியரே இங்கு வந்து ஏற்றுக் கொள்வதாக ஐதீகம் உள்ளது. பின்னர் இந்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கைக்கோள முதலியார் இன மக்கள் இவரை தெய்வமாக வழிபடு கின்றனர்.

திருநெல்வேலியிலிருந்து அம்பாச முத்திரம் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இவ்வூரில் காசீசர், அம்மையப்பர், வீரமார்த்தாண்டீஸ்வரர் சிவாலயங்களும்; கிருஷ்ண சுவாமி, புருஷோத்தம பெருமாள் வைணவ ஆலயங்களும் உள்ளன.

No comments:

Post a Comment