agatiyar

agatiyar
agatiyar

Thursday, July 21, 2011

18 சித்தர்களின் வரலாறு


சதுரகிரி (மகாலிங்கமலை)
“தானான வேதங்கள் நான்கு மொன்றாய்ச்
சார்ந்திங்கோ ருருவாகச் சமைந்ததாலே
வேனானபெயர் சதுரகிரி ஈதென்றே”

என்பது காலங்கிநாத முனிவர் வாக்கு. ரிக், யசூர், சாம, அதர்வன வேதங்கள் நான்கும் ஒன்றாகச் சேர்ந்து இம்மலை உருக் கொண்டதால் சதுரகிரி என்று அழைக்கப்படுகிறதென்பது இவர் கூற்று.
மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு அடி உயரத்தில் நான்கு பக்கங்களும் குன்றுகளால் சூழப்பட்டு, நடுவில் அமைந்துள்ள வட்டமான பள்ளத்தாக்கில் “சுந்தரலிங்கம்”, “மகாலிங்கம்”, “சந்தனலிங்கம்” ஆகிய மூன்று லிங்கத் திருமேனிகளும் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றும் பூஜித்து வரப்படுகின்றன. அச்சித்தர்களது யோக தண்டக்கோல்கள் இன்றும் இச் சன்னிதிகளில் வைக்கப்பட்டுள்ளன. நான்கு புறமும் அமைந்துள்ள குன்றுகள் சதுரமாகத் தோன்றுவதால் “சதுரகிரி” எனப்பெயர் பெற்றதாகக் கொள்ளலாம். அன்றும், இன்றும், என்றும் சித்தர்கள் வாழும் பூமி இது.

நம் காலத்தில் வாழ்ந்த சித்த மகா புருஷர்களும் இம்மலைமீது மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்துள்ளனர். ஸ்ரீவல்லநாட்டு சுவாமிகள் அடிக்கடி இங்கு வந்து, பல திசைகளுக்கும் சென்று அங்கங்கு அவர் உணர்ந்த இடங்களிலெல்லாம் பூஜை செய்வது வழக்கம். ரங்கபாளையம் ஸ்ரீ முனியாண்டி சுவாமிகள் இங்கு வரும்போதெல்லாம் இரவு முழுவதும் தனியே கானகங்களில் சஞ்சாரம் செய்து சித்தர்கள் அருள் பெற்றவர். இவர் மகாலிங்க சுவாமியுடன் நேரில் பேசுவாரெனக் கூறுவார் உண்டு. யோகாசன ஆலய நிறுவனர் யோகமகாரத்னா தவத்திரு. கோ.மு. சுவாமியவர்கள், “இம்மலையெங்கும் இறையருள் நிரம்பியுள்ளது. அவரவர் பக்குவ நிலைக்கேற்ப உணர்வுகள், காட்சிகள் கொடுத்து ஆன்மா உயர்வதற்குரிய தபோவனமது” என்று இங்கு வந்திருந்தபோது குறிப்பிட்டார். ஞானானுபூதி பெற்ற பெரியோர்களுக்கு இன்றும் சித்தர்கள் தரிசனமளித்து ஆசி வழங்குகின்றனர் இம்மலையில்.
இம்மலைக்குச் செல்லும் பாதைகளுள் வத்திராயிருப்பில் இருந்து செல்லும் வழியே சிரமக் குறைவானதாகும். வத்திராயிருப்பிலிருந்து சுமார் எட்டுக் கிலோ மீட்டர் தூரமுள்ள “தானிப் பாறை” என்ற மலை அடிவாரம் அடையவேண்டும். ரோடுகள், பஸ்கள் வருவதற்கு முன்பு, ஆடி அமாவாசை உற்சவத்தின்போது பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் வந்து தங்கியிருந்த இடம் தானிப்பாறை (வண்டிப்பண்ணை) என அழைக்கப்படுகிறது.

இங்கிருந்து சுமார் 8 கி.மீ. தூரம் கால்நடையாக மலையேறி செல்ல வேண்டும். அடிவாரத்திலேயே அழகிய அருவியும் சிற்றாறும் உண்டு. இங்குள்ள விநாயகரை வழிபட்டே நம் மலைப்பயணம் தொடங்குகிறது. சாதாரணமாகக் காணப்படும் இடம்புரி அல்லது வலம்புரி விநாயகராக இல்லாமல், துதிக்கையை உயர்த்தி, ஆசி வழங்கும் நிலையில் “ஆசீர்வாதப் பிள்ளையார்” என அழைக்கப்படுகிறார். அடிவாரக் காவல் தெய்வமான கருப்ப சுவாமியையும் வழிபட்டு மலையேறத் தொடங்குகிறோம்.
இளைப்பாற வசதியாக நாம் காணும் முதல் இடம் “குதிரை குத்தி” என அழைக்கப்படும் சிற்றோடை. நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெள்ளையர் காலத்தில், இப்போது பாதை இல்லாமல் இந்த ஓடையிலிருந்து சற்று உயரமான குன்றிலேயே பாதை சென்றுள்ளது.
வெள்ளையர்கள் பயன்படுத்திய அப்பாதை இன்று வழக்கத்தில் இல்லை. குதிரை மீது அவர்கள் மலைக்குச் சென்றபோது, இக்குன்றின் மேல் ஏறாமல், குதிரை நிலை குத்தி நின்றதால் இவ்விடம் ‘குதிரை குத்தி’ என்று அழைக்கப்படுகிறது. அடுத்து நாம் கடப்பது வழுக்குப்பாறை. மலையின் சாய்வான பகுதி. மழைக்காலத்தில் கவனமின்றி சென்றால் வழுக்கி விழ நேரலாம். இப்பாறையின் சரிவில் இரு குகைகள் உள்ளன. இளைப்பாறி செல்ல வசதியானவை. இக்குகைகளில் பாம்பாட்டிச் சித்தர் இருந்ததாக காலங்கிநாதர் ஞானவிந்த இரகசியம் தெரிவிக்கிறது.

மலை நடையில் அசதி மேலிட்டு, சற்று ஓய்வு எடுக்கலாம் என எண்ணும்போது நாம் அடையும் இடம் “அத்தியூத்து”. அத்திரி முனிவர் இருந்ததாகக் குறிக்கப்படும் குகையில் இருந்து ஊற்று, பெருக்கெடுத்து ஓடையாக ஓடுகிறது. கரையில் பெரும் அத்திமரம் ஒன்றுள்ளது. இங்கு குளித்துவிட்டு கொண்டு செல்லும் உணவு வகைகள் உட்கொண்டு, சாவகாசமாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம். ஆனால், அத்திப்பழ சீசன் காலமெனில் பகலில் குரங்குகளும், மாலையில் கரடிகளும் இங்கு வருவதுண்டு. இதைத் தவிர நீர்நிலைகள் உள்ள இடமெல்லாம் யானைகள் நடமாட்டமும் சாதாரணமாக இம்மலையிலுள்ளது.
அத்தி ஊத்திலிருந்து உயரமான மலையில் பாதை செல்கிறது. இரு கொண்டை ஊசி வளைவுகள் மேலேற்றுகிறது. இவ்வளைவுகள் கொண்ட பாதையை நம் முன்னோர்கள் “கோணத் தலைவாசல்” என அழகிய காரணப் பெயரிட்டு அழைத்துள்ளனர். வழி நெடுக ஆங்காங்கே சிறிய பெரிய குகைகள் உள்ளன.

அவைகளில் சித்தர்கள் இன்றும் சிலருக்கு அவ்வப்போது காட்சியளிக்கிறார்களென்பது உண்மை. நீர் வளமோ, மர வளமோ இல்லாத இடங்களில் உள்ள இத்தகைய குகைகளில் சில குகைகள் மட்டும் ஏர் கண்டிசன் செய்தது போல் உள்ளதை உணரலாம். அங்கு எல்லாம் சித்தர்கள் வாழ்கிறார்கள் என்று ஐதிகம். திருமூலர், அகத்தியர், காலங்கி நாதர், போகர், புசுண்டர், கோரக்கர் முதலான சித்தர்கள் வாழ்த்தி வாழும் பகுதி அவர்கள் பெயரால் வனமென அழைக்கப்படுகிறது.
அடுத்து நாம் சற்று ஓய்வெடுப்பது, கோரக்கர் குகை என வழங்கும், கோரக்கநாதர் தவமிருந்த குகையாகும். செல்லும் பாதையிலிருந்து சுமார் இருபதடி கீழிறங்கி இக்குகையை அடைய வேண்டும். அழகிய வடிவமைந்த பெரும் பள்ளம் பாறையில் உள்ளது. அது கஞ்சா கடைந்த குண்டு எனக் கூறப்படுகிறது. சலசலத்து ஓடும் சிற்றோடை குகை வாயிலில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த கோரக்கர் தீர்த்தத்தில் குளிப்போர் நோய் நீங்கும், இருகரங்களையும் சேர்த்து நீரெடுத்து மும்முறை அருந்தினால் ஜென்ம சாபல்யமடையுமென்பது காலங்கிநாதர் வாக்கு. இக்குகையில் தியானத்தில் அமர்ந்தால், நமது பக்குவ நிலைக்கேற்ப காட்சிகள் தோன்றுகின்றன. சதுரகிரி தரிசனத்தில் இக்குகையில் தியானத்தில் ஈடுபடுவதும் முக்கிய அம்சமாகும்.

அரிசிப் பாறை என்ற இடத்தில் மணல் அரிசி போன்று கிடப்பதைக் காணலாம். இடத்திற்குப் பெயர் சூட்டுவதில் நம் முன்னோர்கள் காரணப் பெயராக அமைத்திருப்பது வியப்பளிக்கிறது, இங்கு இயற்கையாகவே கல்லில் அமைந்த குமார்கள் பீடம் (காலற்ற நாற்காலி போன்று) உள்ளது. மேலே செல்லும் வழியில் நாம் தரிசிப்பது “இரட்டைலிங்கம்” சங்கரநாராயணர் என இவ்விரு லிங்கங்களையும் வழிபடுகின்றனர்.
பசுக்கிடை எனும் இரு சமவெளிகள் அடுத்துள்ளது. மலையில் மாடுகள் மேய்ப்போர் பசுக்களை இச்சமவெளிகளில் ஒன்றாக நிறுத்தி, சுற்றிலும் முள் வேலியிட்டு, இரவு பகலாக கண் விழித்து காட்டு மிருகங்களிடமிருந்து மாடுகளைக் காப்பர். இப்பசுக்கிடைகளைக் கடந்ததும் கோயில் எல்லையை அடைகிறோம். இவ்விடம் நாம் நெருங்கியதும் இறையருளால் ஒரு பைரவர் (நாய்) நம்மை வரவேற்பது போல் எதிரே வந்து கோயில் வரை அழைத்துச் செல்லும். திரும்பி வரும்போதும் இவ்வெல்லை வரை வந்து வழியனுப்பும். இது பலருக்கு ஏற்பட்ட அனுபவமாகும். இந்த எல்லையிலேயே அருவியொன்றுண்டு. சுமார் பத்தடி கீழிறங்கி அருவியை அடைய வேண்டும். இவ்வருவியில் குளித்ததும் மலையேறி வந்த களைப்பு, உடல் அசதி அனைத்தும் ஒரு நொடியில் மறைவது வினோதமே. பல மூலிகைகள் கலப்பு காரணமாக இருக்கலாம்.
முதலில் நாம் தரிசிப்பது பலாவடி கருப்பசுவாமி. இரு பலாமரங்களின் அடியில் கருப்பசுவாமிக்குரிய அரிவாள் வைக்கப்பட்டு காவல் தெய்வமாக விளங்கி நிற்கிறது (தற்போது இங்கு சுதையில் ஸ்ரீ கருப்பசாமி சிலை வைக்கப்பட்டுள்ளது). இதன் முன்பு சலசலவென ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையில் ஸ்நானம் செய்வது உடலுக்கும் உள்ளத்திற்கும் இதமளிப்பதாகும்.
அடுத்து நாம் தரிசிப்பது ஸ்ரீ சுந்தர மகாலிங்க சுவாமி ஓடையைக் கடந்து தென்புறமுள்ள குன்றின் மீதேறி இந்த லிங்க தரிசனம் பெறுகிறோம். அகஸ்திய மாமுனிவர் இம்மலைக்கு வந்திருந்தபோது, தான் பூஜை செய்து வழிபடுவதற்காகப் பிரதிஷ்டை செய்த லிங்கத் திருமேனியாகுமிது. மேலும், தவம் மேற்கொள்ள அவர் பொதிகைக்குப் புறப்பட்டபோது, அருகிலிருந்த சுந்தரானந்த முனிவர், அகஸ்தியர் பூஜை செய்தது போன்று வழிபாடுகளைத் தொடர்ந்து தான் செய்து வர அகஸ்தியரின் அனுமதி பெற்று அவ்வாறே செய்து வந்தார். பலகாலம் சுந்தரானந்தரால் பூஜிக்கப் பெற்றமையால் “சுந்தரலிங்கம்” என அழைக்கப்பட்டது.

இத்தலத்தின் பிரதான ஆலயமான ஸ்ரீ மகாலிங்க சுவாமி வரலாறு ஸ்தலபுராணம் மலையடிவாரத்திலுள்ள மாவூத்து ஸ்ரீ உதயகிரிநாத சுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கயிலையில் யாழ்வல்ல தேவர் என்ற சிவகணமும் பார்வதியின் தோழி தெய்வநங்கையும் இச்சை கொண்டு நோக்க, சிவபெருமான் அவர்களை பூலோகத்தில் ஜெனித்து இன்ப துன்பம் அனுபவித்த பின்னர் தான் வந்து முக்தியளிப்பதாகக் கூறி அனுப்பினார். மாவூத்து அருகிலுள்ள கோட்டையூர் எனும் கிராமத்தில் பச்சைமால் எனும் பெயருடன் யாழ் வல்லதேவர் பிறந்தார். தெய்வநங்கை அவரது அத்தை மகளாக சடை நங்கை என்ற பெயரில் பிறந்து வளர்ந்தாள். தக்க பருவத்தில் இருவருக்கும் மணமுடித்தனர்.
மலை அடிவாரத்தில் மாட்டு மந்தைகளை மேய்த்து வந்த பச்சைமால் கறந்து கொடுக்கும் பாலைப் பெற்று வீடு சேர்ப்பது சடை நங்கையின் கடமை, ஒரு தினம் சித்தர் (புருடர்) ஒருவர் தோன்றி, சடைநங்கையிடம் தாகம் தீர்க்க பால் கேட்டார். மறுக்காமல் சடை நங்கையும் வழங்கினாள். இவ்வாறு தொடர்ந்து பல தினங்கள் சித்தபுருடர் பால் அருந்தி வந்தார். பால் குறைவுபடுவதைக் குடும்பத்தினர் பச்சைமாலிடம் தெரிவித்தனர்.
பச்சைமால், மனைவி அறியாமல் பின் தொடர்ந்து வந்து, அவள் எவருக்கோ பால் கொடுப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தார். இதையடுத்து, சடை நங்கையை சடாதாரி அம்மன் என்ற பெயரில் தெய்வமாக்கி, அவரை வழிபடுவோர்க்கு வேண்டியது கிடைக்குமெனக் கூறிய சித்தர், உதயத்தில் அருகிலிருந்து கட்டிடத்துள் நுழைந்து லிங்கமாகி உதயகிரிநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பொழுதும் மகாலிங்கமலைக்குச் செல்லும் பக்தர்கள் பலர் தம்பிபட்டி அருகிலுள்ள மாவூத்து ஸ்ரீ உதயகிரி நாதரையும், ஸ்ரீ சடாதாரி அம்மனையும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மனைவி தெய்வமாகி, தான் தனியனாகிப் போன பச்சைமால், மாட்டுக்கிடையுடன் சதுரகிரி மலைக்குச் சென்றான். அங்கிருந்த சுந்தரானந்த முனிவர் போன்ற ரிஷிகளுக்கும், சிவலிங்க (சுந்தரலிங்கம்) அபிசேகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பசுவின் பாலைக் கொடுத்து வந்தான். பச்சைமால் இவ்வுலகிலிருந்து கைலாயம் செல்லும் காலம் வந்ததறிந்த சிவபெருமான் ஒரு பரதேசியாக சதுரகிரி மலை வந்தார்.
பச்சைமால் நிவேதனத்திற்காக ஒதுக்கிய பசுவை மறைத்து வைத்தார். அப்பசுவைக் காணாது பல திசைகளிலும் அலைந்து திரிந்த பச்சைமால் அப்பசுவின் காம்பிலிருந்து நேரடியாக ஒரு பரதேசி பாலருந்துவதைப் பார்த்தான். கடுங்கோபத்துடன் கையிலிருந்த கோலால் பலங்கொண்ட மட்டும் ஓங்கி அப்பரதேசியை அடித்தான். அவர் தலையில் காயம்பட்டு சாய்ந்தார்.
இந்த அமளியைக் கேட்டு சுந்தரானந்தர் முதலிய ரிஷிகள் அங்கு வந்து பார்க்க, அந்தப் பரதேசி ரிஷபாரூடராகக் காட்சியளித்தார். பச்சை மாலை கயிலைக்கு அழைத்துச் செல்ல தான் வந்ததாகக் கூறினார். பச்சைமாலும், மற்றுமுள்ள ரிஷிகளும் தேவரீர் இங்கே நிரந்தரமாக எழுந்தருளி, மலையேறி வரும் பக்தர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி அருள்புரிய வேண்டுமெனப் பிரார்த்திக்க, பெருமான் மகாலிங்கமாக எழுந்தருளினார். இன்றும் இந்த லிங்கம் சாய்ந்திருப்பதையும், உச்சியில் வடு இருப்பதையும் காணலாம். பச்சைமால் யாழ்வல்ல தேவராக கயிலை சென்றார்.
மலையிலிருந்த ரிஷிகள் சித்தர்கள் நவராத்திரி ஒன்பது தினங்களும் தவம், விரதங்கள் மேற்கொண்டு அம்பிகையை இங்கே நிரந்தரமாக அருளாட்சி செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டனர். அதனை ஏற்ற அம்பாள் “ஆனந்தவல்லி” எனும் திருநாமத்துடன் சக்திபீடமாக விளங்கி எண்ணற்ற பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறாள்.
பிருகுமுனி காரணமாக, இறைவனிடமிருந்து பிரிக்க முடியாத நிலை வேண்டுமென்று தவமிருந்த பார்வதி, ஒரு சந்தன மரத்தடியில் ஏற்படுத்திய லிங்கம் சந்தனலிங்கம் என அழைக்கப்படுகிறது. இதனருகில் அமைந்துள்ள பெருங்குகை சட்டநாதர் குகையாகும். இன்றும் இச்சித்தர் இங்கு வாழ்வதாகப் பலர் உணர்கின்றனர் (பெரும் குகையை மறைத்து எட்டிப் பார்க்குமளவு சிறுபிளவு மட்டுமே தற்போது உள்ளது). இக்கோயிலுக்கு மேலேயுள்ளது காளிகாவனம் என்றழைக்கப்படும் பெருங்காடு. இங்கு காளி ஆட்சி செய்வதாக ஐதிகம். இக்கானகத்திலிருந்து வரும் ஓடையும், அருவியும் காளிகாதீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
மகாலிங்கம் கோயிலுக்குத் தென்புறம் சுமார் 1 கி.மீ. உயரத்திலுள்ள ‘தவசிக் குகை’ அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். செல்லும் வழி அடர்ந்த கானகம். அதில் வெள்ளைப் பிள்ளையார் எனும் ஓர் பெரும் பாறை உள்ளது. ஒருபுறம் நின்று பார்த்தால் பெரிய விநாயகர் தோற்றம் தரும். சற்று தள்ளி நின்றால் வெறும் பாறையாகத் தோன்றும். இன்னும் மேலே செல்லும் வழியில் ஒரு மரத்திடையில் அரையடி உயரமுள்ள விநாயகர் சிலையொன்றுண்டு.
அரையடி அகலமுள்ள பலகைக் கல்லில் உளிபடாமல் மற்றொரு கல்லைக் கொண்டு இந்த விநாயகர் உருவம் உண்டாக்கப்பட்டுள்ளது. பண்டைக் காலத்தில் எந்த சித்தரால் உருவாக்கப்பட்டதோ இம்மூர்த்தி. வனத்தில் பெரும் பிரம்புக் கொடிகள் காற்றிலாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனந்தவல்லி ஊஞ்சலாடுகிறாளென வழிபடுகின்றனர்.

மலையுச்சியை அடைந்ததும் கண்ணுக்கெட்டிய தூரம் நெல்லி வனமாக உள்ளது. ஒரு நெல்லிக் கனி உண்டதும் மலையேறி வந்த களைப்பைத் தீர்த்து வைக்கும் இறையருளை அங்கே காணலாம். தவசிக் குகை சுமார் பதினைந்து பேர் அமரக்கூடிய அளவு மண்தளமாக உள்ளது. ஏர் கண்டிசன் அறையிலிருக்கும் குளுமை அங்குள்ளது. அக்குகையினுள்ளே வேறொரு குகையும் (ஓர் ஆள் நுழையக் கூடிய அளவில்) உள்ளது. அதற்குள் சென்று பார்த்தவர்கள் எவருமில்லை எனக் கூறப்படுகிறது. இக்குகைக்கு மேலே சித்தர்கள் அமர்ந்து ஆராய்ச்சிகள், வாதங்கள் புரிவதற்குரிய வட்ட ஆசனக் கற்கள் பன்னிரண்டு உள்ளன. வேறு பாதையில் கீழே இறங்கி வரும்போது மஞ்சள் ஊத்து எனும் ஊற்றில் சுவையான மஞ்சள் நிற நீர் உள்ளது.
இம்மலையில் ஏராளமான மூலிகைகள் உள்ளன. மலைவாழ் பளியர்கள் அனைத்து மூலிகை வகைகளையும் அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்வது இயலாததாக உள்ளது. ஜோதிர்வதை எனும் செடிகள் இரவில் ஒளி வீசுகின்றன. அமாவாசை தின இரவுகளில் எருமை கனைக்கும் குரல் கொடுக்கும் மரம் “கனை எருமை” ஊசியிலே உள்ள மிளகாய், சுண்டைக்காய் அளவில் நன்கு பழுத்த தக்காளிப்பழம் வியப்படைய செய்யும். மலை எங்கும் கசப்பற்ற பால் சுண்டைக்காய்கள் உண்டு.
ஒரு மரத்தின் பால் மனிதர் மேல் பட்டால் முகம் வீங்கிக் கொண்டே செல்லும். மரத்தின் பெயரே “முகரை வீங்கி.” தொடர்ந்து மூன்று தினங்கள் சந்தனம் பூசி வர வீக்கம் குறைந்து விடுகிறது. பூமிக்கடியிலிருந்து கோரைக் கிழங்கு எடுத்து வருகிறார்கள். ஒரு ஆள் உயரத்தில்கூட இக்கிழங்கு உள்ளது. பச்சையாகவே இதனை வெட்டி மலைத்தேனுடன் சேர்த்துச் சாப்பிட மிகச் சுவையாக உள்ளது. கிழங்கு இருக்குமிடம், அதனை எடுத்தல், தேன் கொண்டு வரல் அனைத்தும் பளியர்களாலேயே முடிகிறது. இன்னும் எண்ணற்ற மூலிகைகள் இங்குள்ளன.
பலவகையான மிருகங்கள், பறவைகள் உள்ளன. கடுவாய், கரடி, காட்டுப்பன்றி கூட்டங்கூட்டமாக யானைகள், சுமார் நான்கடி நீளம் உள்ள வால் கொண்ட மந்திகள் (இசை ஒரு தாவலில் சுமார் நாற்பதடி தூரம் கடக்க வல்லவை). மான், வரையாடு, மயில், சுமார் இரண்டடி நீள வாலுடைய காட்டுக் கோழி, ஒன்றரையடி உயரமே உள்ள சரகு மான் (இசை சருகுகளுக்கிடையே வாழ்கின்றன). மரத்திற்கு மரம் பறக்கும் அணில் (வாத்து கால் விரல்களுக்கிடையே மெல்லிய தோல் போன்ற அமைப்பு இந்த அணில் கால்களுக்கிடையே உள்ளது). மலைப்பாம்பு, பறக்கும் பாம்பு உள்பட ஏராளமான பாம்பு வகைகள் உள்ளன.
பாறை அமைப்புகள் பலவிதங்களில் உள்ளது. பாறை நெகிழ்வது ஒரே மாதிரியன்றி வேறு வேறு விதமாக அமைந்துள்ளது. அடுக்குப் பாறைகள் உள்ளன. தாவரவியல், விலங்கியல், பாறையியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இம்மலை ஒரு வரப்பிரசாதமாகும்.
இங்கு ஆடி அமாவாசையன்று, இலட்சக்கணக்கான சேவார்த்திகள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். சித்தர்கள் வாழும் இம்மலையை அக்காலம் முதல் இக்காலம் வரை போற்றி வரும் பரதேசிகளுக்கு திருவிழாவின்போது சிறப்பான மரியாதைகள் வழங்கப்படுகின்றன. வந்திருக்கும் பரதேசிகளுள் முதிர்ந்தவர் ஒருவரைத் தலைவராகக் கொள்கின்றனர்.
அத்தலைவரும் கோயில் நிர்வாகியும் ஒரே இலையில் இரு பக்கமும் அமர்ந்து உணவருந்துகின்றனர். அனைத்துப் பரதேசிகளுக்கும் விருந்தளிக்கப்படுகிறது. இச்சாதுக் கூட்டத்தினர் இத்துடன் கலைந்து செல்வதில்லை. ஒரே குழுவாக மலையிலிருந்து இறங்கி, பல ஊர்களுக்கும் சென்று ஒரு மாதம் கழித்து ஆவணி மாதம் சாலிச் சந்தை நாடார் உறவின் முறையினர் உபசரிப்பைப் பெற்று பிரிந்து செல்கின்றனர்.
நவராத்திரி ஒன்பது தினங்களும் ஆனந்தவல்லியம்மன் கொலுவிருக்கிறாள். விஜய தசமியன்று பாரிவேட்டையும் அன்னையே நடத்துகிறாள். சர்வபூரண பூஷிதையாக அம்பாள் புறப்படும்போது பளியர் இளம் பெண்களனைவரும் வந்து வாழ்த்துப் பாடல் பாடி உணர்ச்சி வசப்பட்டு, அம்பாளுக்கு வெற்றி திலகமிட்டு வேட்டைக்கு அனுப்பும் காட்சி காண்பவரைப் புல்லரிக்கச் செய்வதாக உள்ளது. நவராத்திரி உற்சவத்தின்போது சுமார் இருபதாயிரம் மக்கள் வந்து வழிபடுகின்றனர்.
அமாவாசை, பௌர்ணமியன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். அமாவாசையன்று பகல் பன்னிரெண்டு மணிக்கு மகாலிங்கத்திற்கு பதினொருவகைப் பொருட்களால் அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுந்தரலிங்கம், பலாவடிகருப்பு, சந்தன லிங்கத்திலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலை ஏழு மணியாகும் இறுதி வழிபாடு. பௌர்ணமியன்று இதே அபிஷேகம் வழிபாடுகள் மாலை ஆறு மணிக்கு தொடங்கி நள்ளிரவில் முடியும்.
அடுத்து வரும் ஆடி அமாவாசையன்று இயன்றவர்கள் அனைவரும் சதுரகிரி சென்று இறையருளும் சித்தர்கள் ஆசியுடன் பெற்று வரலாம். மலைவளங்கள் காண விரும்புவோர் பௌர்ணமியை ஒட்டி சில தினங்கள் தங்கும்படி சென்று அனைத்தும் கண்டு வரலாம். பௌர்ணமியின்போது சில தினங்கள் சந்தனமகாலிங்கம் சன்னிதியில் சிறப்பான முறையில் அன்னதானம் உண்டு

No comments:

Post a Comment