அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், பஞ்சேஷ்டி
- இறைவன் - அருள்மிகு அகத்தீஸ்வரர்
- இறைவி - அருள்மிகு ஆனந்தவல்லி
- தீர்த்தம் - அகத்திய தீர்த்தம்
- ஸ்தலம் - பஞ்சேஷ்டி (பஞ்ச - ஐந்து, இஷ்டி - யாகம்)
- ஸ்தல விருட்சம் - வில்வம்
- இதர மூர்த்திகள் - சித்தி விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், இஷ்ட லிங்கேஸ்வரர், பைரவர், அகத்தியர்

கோயிலுக்கு செல்லும் வழி
சென்னையிலிருந்து வடமேற்கில் சுமார் 28 கீ.மீ தொலைவில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் (G.N.T Road) பஞ்சேஷ்டி பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் 200 மீட்டர் தொலைவில் தெற்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கூடிய "பஞ்சேஷ்டி" திருக்கோயில் அமைந்துள்ளது.
பஸ் ரூட் - கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் காரணோடை வழியாக 112, 112, 112A, 112B, 131, 131A, 131B, 132, 133M, 90, 58C, S, L, V, S
பஸ் நிறுத்தும் இடம் - பஞ்சேஷ்டி
வழிபாட்டு நேரம்
காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, சிறப்பு நாட்களில் கூடுதல் நேரம் வழிபாடு நடைபெறும்.
ஆலயம்
அகத்தீஸ்வரர்
இத்திருக்கோயிலின் மூலவருக்கு அகத்தீஸ்வரர் என்று பெயர். இச்சிவலிங்கம் ஓர் சுயம்பு லிங்கம். அகத்தியர் இத்தலத்திற்கு வரும் முன்பு இச்சிவலிங்கம் இங்கு அமைந்திருந்தது. எனினும் அகத்தியர் வழிபட்டதால், அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றது. அகத்திய முனிவர் இச்சிவலிங்கத்தின் இடது பாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை அரூபமான தோற்றத்தில் வைத்து, சிவசக்தி ரூபமாக பூஜித்துள்ளார்.
அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார்.
ஆனந்தவல்லி அம்பாள்
அம்பாள் ஆனந்தவல்லி தாயார் முக்கண் நாயகி உருவத்திலேயே மூன்று கண்களை கொண்ட அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு நோக்கி தரிசனம் தருகிறார். ஆனந்தவல்லி அம்பாளின் திருமேனி பச்சை மரகதத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இடது பாதம் முன் வைத்த தோற்றமாகக் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
பொதுவாக வலது காலை முன்வைத்து வா என்று அழைப்பதே வழக்கம். ஆனால், ஆனந்தவல்லி அம்பாள், அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது யாகங்களுக்கு இடையூறு செய்ய வந்த அசுர சக்திகளை அழிக்க, தன் இடது பாதத்தை முன்வைத்து, மூன்று கண்களைக் கொண்டு அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் அழித்ததால் இங்கு சத்ரூ சம்ஹார கோலத்தில் காட்சி தருகிறார். தீய சக்திகளை அழிக்கும் பொருட்டு அம்பாள் தன்னுடைய இடது பாதத்தை முன்வைத்துச் சென்ற கோலத்தில் காட்சி தருகிறார். எனவே, இத்தலத்து அன்னை சத்ருசம்ஹாரியாக திகழ்கிறாள். இச்சத்ருசம்ஹாரியை வழிபாடு செய்தால் தீய சக்திகளின் தொல்லைகள் இருக்காது. செயல்களில் தடங்கல்கள் இருக்காது.
சத்ருசம்ஹாரியாக உக்கிரமாகத் திகழ்ந்த அன்னையைக் குளிர்விக்க அன்னைக்கு முன் மிகப்பெரிய மஹாஎந்திரத்தை (துர்கா எந்திரம்) அகத்திய முனிவரே பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்தப்படுத்தியுள்ளார். இந்த யந்திரத்தை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

இஷ்ட லிங்கேஸ்வரர் மகிமை இந்த ஆலயத்தின் வடக்கு மூலையில் அகத்திய முனிவரின் சீடரான புலத்திய முனிவர் இஷ்ட லிங்கம் என்ற சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார். இந்த இஷ்ட லிங்கத்தை நாம் வழிபாடு செய்தால் நம்முடைய விருப்பங்கள் நிறைவேறுவதுடன், அமைதியான வாழ்வு, மனச்சாந்தி கிட்டும் என்பது இங்கு வரும் பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாகும்.

பிற தெய்வங்கள்
இறைவன் இறைவியைத் தவிர, பஞ்சேஷ்டி தெய்வங்களாக விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை பைரவர் ஆகியோரின் சன்னதிகளும் அமைந்துள்ளன. சித்தி விநாயகர் சன்னதி, பாலமுருகன் சன்னதி (முருகனின் சிருஷ்டி கோலம் - அக்ஷமாலை, கிண்டிகையுடன் பிரம்மாவின் சிருஷ்டி தொழிலை பிரம்மாவிடமிருந்து பறித்து தானே மேற்கொள்ளும் தோற்றம்), சண்டிகேஸ்வரர் சன்னதி, இஷ்ட லிங்கேஸ்வரர் சன்னதி, நவக்கிரக சன்னதி மற்றும் அகத்திய முனிவரின் சன்னதி ஆகியவை பிரதான ஆலயத்தை சுற்றி அமைந்துள்ளன.
ஆலயத்தின் வடமேற்குப் பகுதியில் பெரிய புற்று அமைந்துள்ளது. அப்புற்றினுள் இன்றளவும் நாகம் ஒன்று வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


பைரவர்
இஷ்டலிங்கேஸ்வரருக்கு கிழக்கில், ஈசான்ய திசையில் பைரவருக்குத் தனிச் சன்னதி அமைந்துள்ளது,

அகத்திய தீர்த்த மகிமை
கோவிலின் கிழக்குப் பகுதியில் அகத்திய தீர்த்தம் பரந்து விரிந்து காணப்படுகிறது. அகத்திய முனிவர் கூறியபடி சுகேதுவும் அவனது குடும்பத்தினரும் இத்தீர்த்தத்தில் மூழ்கி, சிவனை வழிபட்டு, யாகம் வளர்த்து சாப விமோசனம் பெற்றனர். இன்றும், இத்தீர்த்தத்தில் மூழ்கி, கோவிலை வலம் வந்து, அங்கப் பிரதட்சணம், அடிபிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத நோய்களும் தீர்வதாக ஐதீகம்.

இராஜ கோபுரம்
இந்த ஆலயத்தின் அம்பாள் தான் பிரதானம். இராஜகோபுரமே அம்பாளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுர நுழைவாயில் சிற்பத்தில் அம்பாளை நோக்கியவாறு நவக்கிரகங்கள் ஒரே நேராக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் சனீஸ்வர பகவான் கழுகு வாகனத்துடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு அம்பாளின் பார்வையில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளதால் அம்பாள் ஆனந்தவல்லியை வழிபாடு செய்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அஷ்டதிக் பாலகர்கள் (திசை தெய்வங்கள்) ஒரே நேராக அம்பாளை நோக்கி அமைந்துள்ளது. அம்பாளுக்கு முன்னேயுள்ள மஹா எந்திரத்தின் அதிதேவதைகளின் சிற்பங்களின் வடிவம் இராஜ கோபுர நுழைவாயில் மேல் முகப்பில் அமைந்துள்ளது.
தோஷ நிவர்த்தி மகிமைகள்
ஒரு ஆலயத்தின் இராஜகோபுரம் தெற்கில் அமைந்திருந்தால் அது பரிகாரத் தலமாகவே கருதப்படுகிறது. இக்கோயிலிலும், இராஜகோபுரம் அம்பாளுக்காக தெற்க்கில் அமைந்துள்ளது. எனவே பஞ்சேஷ்டி ஆலயமும் பரிகாரத்தலம் என்பது அனைவருக்கும் விளங்கும்.
இத்திருக்கோயிலில் பக்தர்கள் எவ்வித பரிகாரம் செய்தாலும், அவற்றின் தொடக்கமாக கருவறைக் கூடத்தில் அகண்ட தீபம் மற்றும் விளக்குகள் ஏற்றி வைத்த பின்பே மற்ற பரிகாரங்களை செய்தல் வேண்டும்.
இழந்த சொத்து மீண்டும் கிடைக்க:
அகத்திய முனிவரால் செய்யப்பட்ட ஐந்து யாகத்தில் அன்னதானத்தையே ஒரு யாகமாகச் செய்துள்ளார். அதனால், இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் நமக்குக் கிடைப்பதாகவும், உயர் பதவிகள் தேடி வரக்கூடும் என்றும், பிறவிப் பயனை அடைவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அகத்திய முனிவரே ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்து சென்றுள்ளார். அந்த உண்மைத் தன்மையை அகத்தியர் ஆசிரமங்கள் மூலமாக கேட்டறிந்து இன்றளவும் பலர் திருத்தலத்தில் அன்னதானம் செய்கின்றனர். இது ஒரு அன்னதானத் தலமாக அமைந்துள்ளது.
திருமணத்தடை நீங்க:
அம்பாளுக்கு முன் மிகப்பெரிய மஹா எந்திரத்தை (துர்கா எந்திரம்) அகத்திய முனிவரே பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்தப்படுத்தியுள்ளார். இந்த மஹா எந்திரத்தில் ராகு கால நேரத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகங்கள் செய்து, எலுமிச்சம்பழ விளக்குகளை இந்த எந்திரத்தை சுற்றிலும் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் திருமணத் தடைகள் விலகுவதாகவும், சத்ருக்களின் தொல்லைகள் நீங்குவதாகவும் ஐதீகம்.
நவக்கிரக தோஷம் நீங்க:
இந்த ஆலயத்தின் அம்பாள் தான் பிரதானம். இராஜகோபுரமே அம்பாளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுர நுழைவாயில் சிற்பத்தில் அம்பாளை நோக்கியவாறு நவக்கிரகங்கள் ஒரே நேராக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் சனீஸ்வர பகவான் கழுகு வாகனத்துடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு அம்பாளின் பார்வையில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளதால் அம்பாள் ஆனந்தவல்லியை வழிபாடு செய்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
வாஸ்து தோஷம் நீங்க:
அஷ்டதிக் பாலகர்கள் (திசை தெய்வங்கள்) ஒரே நேராக அம்பாளை நோக்கி அமைந்துள்ளது. அம்பாளுக்கு முன்னேயுள்ள மஹா எந்திரத்தின் அதிதேவதைகளின் சிற்பங்களின் வடிவம் இராஜ கோபுர நுழைவாயில் மேல் முகப்பில் அமைந்துள்ளது. அம்மனையும் மஹாயந்திரத்தையும் வழிபட்டவர்களின் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
சத்ருதோஷம் நீங்க:
இராஜகோபுரம் அம்பாளுக்காக அமைந்து இருப்பதாலும் அம்பாள் சத்ருசம்ஹாரியாக இருப்பதாலும் இந்த ஆலயமே சத்ருதோஷ பரிகாரத்தலமாக அமைந்துள்ளது.
விரும்பியன கிடைக்க:
இந்த ஆலயத்தின் வடக்கு மூலையில் அகத்திய முனிவரின் சீடரான புலத்திய முனிவர் இஷ்டலிங்கம் என்ற சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார். இந்த இஷ்ட லிங்கத்தை நாம் வழிபாடு செய்தால் நம்முடைய விருப்பங்கள் நிறைவேறுவதாகவும், மனச்சாந்தி கிடைப்பதாகவும், வழக்கு விவகாரங்கள் தீர்வதாகவும் ஐதீகம்.
பஞ்சேஷ்டி என்னும் திருத்தலம்
பஞ்சேஷ்டி திருத்தலம் அரும்பெரும் ஆன்மிகத் திருத்தலமாக விளங்குகிறது. ஒருமுறை மாமுனிவர்களான வசிஷ்டர், கௌதமர், கன்வர் ஆகியோர் பூமியில் தாங்கள் தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தை கூறியருள வேண்டும் என்று சக்கரம் ஒன்றை செய்து அதை உருளச் செய்தார். அத்தர்ப்பைப் புல் சக்கரமானது உருண்டோடி வந்து ஓரிடத்தில் நின்றது. அவ்விடத்தில் தவம் செய்யும்படி முனிவர்களிடம் கூறினார் பிரம்மா. பிரம்மா காட்டிய அந்த இடமே பஞ்சேஷ்டி திருத்தலமாகும்.
கோடை காலத்தில் இத்திருத்தலத்தைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும், இவ்வூரில் மட்டும் பூமியின் மேற்பரப்பிலேயே சுவையான நீர் கிடைக்கும். இந்த அதிசயம் இன்றளவும் நாம் காணும் உண்மையாகும். எனவே, இத்தலம் "பஞ்சம் தீர்க்கும் பஞ்சேஷ்டி" என்று அழைக்கப்படுகிறது. இனி, இத்தலத்திற்கு பஞ்சேஷ்டி என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்று பார்ப்போம்.
பஞ்சம் - ஐந்து, இஷ்டி - யாகம், அதாவது அகத்திய முனிவரால் ஐந்து யாகங்கள் நடத்தப்பெற்ற திருத்தலம் என்பதால் இத்தலம் பஞ்சேஷ்டி என்று பெயர் பெற்றது. அகத்திய முனிவர் ஐந்து யாகங்கள் நடத்த வேண்டிய காரணம் தான் என்ன?
ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமான் அங்கிருந்தோருக்கு சிவ தத்துவத்தை போதித்து கொண்டிருந்தார். அவ்வேளையில் சிவபெருமானின் அருகில் பார்வதி தேவியும் அமர்ந்திருந்தார். அப்போது அங்கிருந்த சுகேது என்ற யட்சன் சிவபெருமானிடம், "பெருமானே! பார்வதி தேவியையும் அருகில் வைத்துக் கொண்டு சிவ தத்துவத்தை எங்களுக்கு விளக்கிக் கூறுவது சரிதானா?" என்று கேட்டான். சிவபெருமான் புன்னகைத்தார். ஆனால் அருகில் இருந்த முருகப் பெருமானுக்கோ கோபம் வந்தது. சிவனும், சக்தியும் ஒருவரில் ஒருவர் பதியென்று அறிந்த பின்னும் இக்கேள்வியை கேட்ட சுகேதுவை அசுரனாகப் பிறக்கும்படி சபித்தார் முருகப் பெருமான்.
சுகேது அசுரனாகப் பிறந்தான். அசுரப் பெண்ணொருத்தியை மணந்து மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தான். அம்மூன்று குழந்தைகளும் தங்கள் தந்தைக்கு நேர்ந்த சாபம் பற்றி அறிந்தனர். அவர்கள் பராசக்தியை நோக்கி தவம் புரிந்து, அளப்பர்கறிய ஆற்றல்களை பெற்றனர். தாங்கள் பெற்ற அரிய ஆற்றல்களைக் கொண்டு தேவர்களை வென்றதோடு, அவர்களை அடிக்கடி துன்புறுத்தியும் வந்தனர்.
சுகேதுவின் புதல்வர்களால் துன்பத்திற்குள்ளான தேவர்கள் இது பற்றி அகத்திய முனிவரிடம் முறையிட்டனர். அகத்திய முனிவர் சிவபெருமானைத் துதித்தார். சிவபெருமான் ரிஷபாரூடராக பார்வதி தேவி, விநாயகப் பெருமான், முருகப் பெருமான், நந்தி தேவர் ஆகியோருடன் அகத்தியரின் முன்பு எழுந்தருளி அகத்தியருக்குத் தேவையான ஆற்றலை அருளினார்.
இந்நிலையில் அசுரன் சுகேது மகிஷாசுரண்யம் என்ற வனத்தில் இருந்த மத்தன், உன்மத்தன், பிரமதத்தன் என்னும் ராட்சதர்களுடன் போரிட்டுத் தோற்று கடலுக்கு அடியில் சென்று மறைந்தான். அவனது மூன்று புதல்வர்களும் தங்கள் தந்தையை தேடி கடலை கலக்கினர். இதனால், கடல்வாழ் உயிரினங்கள் அஞ்சி நடுங்கின. உலகில் பிரளயம் ஏற்பட்டு உயிர்கள் துன்பம் அடைந்தன.
அவ்வேளையில் அகத்திய முனிவர் தனது ஆற்றலால் கடல் நீர் முழுவதையும் பானகம் போல் குடித்துவிட்டார். கடல் நீர் முழுவதும் காணாமல் போய் நிலமெல்லாம் வறண்டது.
இதனையறிந்த தேவர்கள் மீண்டும் கடலை உருவாக்கும்படி வேண்டினர். அகத்தியர் பஞ்சேஷ்டி திருத்தலத்தில் சிறிது நீரை உமிழ்ந்த பின், மீதி நீரை முன்பு கடல் இருந்த இடத்திலேயே உமிழ்ந்தார். பஞ்சேஷ்டியில் அகத்தியர் உமிழ்ந்த சிறிது நீரே இன்று திருக்குளமாகத் திகழ்கிறது. "அகத்திய உமிழ்நீர் தீர்த்தம்" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
அகத்திய முனிவர் வைகாசி பௌர்ணமி தினத்தில் இத்திருக்குளத்தை உருவாக்கியதால், ஒவ்வொரு ஆண்டும், வைகாசி பௌர்ணமி நாளில் கங்கை நதியே இத்தீர்த்தத்தில் கலப்பதாக ஐதீகம்.
இந்திரன் - விஸ்வருபன் சாபம் நீங்கிய தலம்
ஒருமுறை தேவர்களின் தலைவனான இந்திரன் யாகம் ஒன்று நடத்த விரும்பினான். தேவகுருவான பிரகஸ்பதியோ அவ்வேளையில் தவத்தில் ஈடுபட்டிருந்தார். எனவே விஸ்வருபன் என்பவரை தனது குருவாக ஏற்று யாகத்தை நடத்திவிட்டான்.
இதனால் கோபமடைந்த பிரகஸ்பதி, இந்திரனையும் விஸ்வரூபனையும் மானிடப் பிறவி எடுக்கும்படி சபித்தார். அவர்கள் இருவரும் மித்ரத்வஜ மன்னனின் புதல்வர்களாக, சந்திரமௌலிப்ரியன் மற்றும் சாம்புப்ரியன் என்னும் பெயரில் பிறந்தனர்.
அதுபோல, குபேரனின் மகளான பத்மினி என்பவள் உரோம மகரிஷியை பரிகசித்ததால் அம்முனிவரின் சாபத்திற்கு உள்ளானாள். அதாவது, பத்மினி விருத்தாசலத்தை ஆண்டு வந்த பாவபானு என்ற மன்னனுக்கு அம்பிகை என்ற பெயரில் மகளாகப் பிறந்தாள்.
அம்பிகை திருமண வயதை எட்டியதும் பாவபானு மன்னன் அவளுக்கு சுயம்வரம் நடத்தினான். சம்பாசுரன் என்னும் அசுரனும் மானிட உருவெடுத்து சுயம்வரத்தில் கலந்து கொண்டதோடு, அம்பிகையையும் தூக்கிச் சென்றான். இதனையறிந்த, சுயம்வரத்திற்கு வந்திருந்த சந்திரமௌலிப்ரியன் மற்றும் சாம்புப்ரியன் சம்பாசுரனை துரத்திச் சென்று போரிட்டு வென்றனர். அம்பிகையை இருவருமே திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் தக்க சமயம் பார்த்து சம்பாசுரன் மீண்டும் அம்பிகையை தூக்கிச் சென்றுவிட்டான். அம்பிகையை காணாமல் தவித்த சந்திரமௌலிப்ரியனும் சாம்புப்ரியனும் பல இடங்களிலும் தேடி இறுதியில் காளஹஸ்தி வந்தடைந்தனர்.
அப்போது காளஹஸ்தியின் தென்கிழக்கில் தவம் செய்யும் அகத்திய முனிவரின் குரலைக் கேட்டனர். அகத்திய முனிவர் தங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருவரும் அவ்விடத்திற்கு வந்தனர். அவ்விடம் பஞ்சேஷ்டி ஆகும். பஞ்சேஷ்டிக்கு வந்த சந்திரமௌலிப்ரியனும் சாம்புப்ரியனும் அகத்தியரின் பாதங்களை வணங்கி, நடந்தவற்றை கூறினர். அகத்திய முனிவரும் அவ்விடத்தில் ஓர் ஆசிரமம் அமைத்து பிரதோஷ பூஜையை செய்யும்படி கூறினார்.
ஒருநாள் பிரதோஷ பூஜையை முடித்த இருவரும் ஆசிரமம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் அபயக்குரல் கேட்க, அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கே சக்திஉபாசகன் என்னும் அசுரன் அம்பிகையை காளி தேவிக்குப் பலி கொடுக்கவிருந்தான். அவன் ஏற்கனவே சம்பாசுரனிடமிருந்து அம்பிகையை தூக்கி வந்திருந்தான். சந்திரமௌலிப்ரியனும் சாம்புப்ரியனும் அவனுடன் போரிட்டு அவனை கொன்று அம்பிகையை மீட்டு வந்தனர். இறுதியில் அகத்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி அம்மூவரும் சாப விமோசனம் பெற்று விண்ணுலகை அடைந்தனர்.
இவ்வாறு பஞ்சேஷ்டி திருத்தலம் புராண காலந்தொட்டே விண்ணுலகோர்க்கும், மண்ணுலகோர்க்கும் நற்கதி வழங்கிய புண்ணியத் தலமாகத் திகழ்கிறது.
சிறப்பு நாட்கள்
பிரதோஷம்
பிரதோஷ வழிபாட்டின் மகிமையை சிவபெருமான் உலகிற்குத் தெரியப்படுத்திய தலம் என்ற சிறப்பு பஞ்சேஷ்டிக்கு உண்டு. வங்கக் கடலின் அருகே அமைந்துள்ள முக்கிய சிவத்தலங்களில் பிரதோஷ பூஜைக்கு பிரசித்தி பெற்ற சிவத்தலம் பஞ்சேஷ்டி. இந்திரன், இந்திராணி, விஸ்வரூபன் போன்ற தேவர்கள் அகத்திய முனிவருடன் பஞ்சேஷ்டியில் தங்கியிருந்து பிரதோஷ பூஜைகள் செய்து, பிரதோஷ விரதத்தைக் கடைப்பிடித்ததால் அகத்திய முனிவர் மூலம் அவர்களுக்கு சாப விமோசனம் கிட்டியது.
கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
இத்திருத்தலத்தில் ஒவ்வோராண்டும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் யாகம் வளர்த்து சுயம்பு லிங்கமான அகஸ்தீஸ்வரருக்கு மகா அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் யாக பூஜை, சிறப்பு அலங்காரம், அபிஷேகங்களைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அன்று இந்தப் பூஜையில் கலந்து கொண்டு, அகத்தீஸ்வரரை மனமுருக வேண்டுபவர்களுக்கு நோயற்ற வாழ்வு, மன நிம்மதி, வாழ்வில் சகல நன்மைகள், சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருக்கல்யாணம்:
இத்தலத்தில் வைகாசி பௌர்ணமி அன்று நடைபெறும் திருக்கல்யாணம் மிகச் சிறப்பானது. அன்று அகத்தியர் இத்திருத்தலத்திற்கு நேரில் வந்து இறைவனின் திருமணத்தை காண்பதாக ஐதீகம். அன்று திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு வணங்கும் பக்தர்களை ஆத்மார்த்தமாக வருகை தரும் அகத்தியர் பெருமான் வாழ்த்தி, அனுக்கிரகம் செய்வதாக ஐதீகம்.
இத்திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளும் திருமணம் ஆகாதவர்களுக்கு அவர்களது தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூடுகிறது. திருமணம் ஆனவர்களுக்கு ஆசீர்வாதம் கிட்டுகிறது. எனவே பக்தர்கள் பெருமளவில் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்கின்றனர்.
தொடர்புக்கு
நிர்வாக அலுவலர்
து. வள்ளுவன். B.A.
ஸ்தானீகம் & அர்ச்சகர்கள்
- P.N. ராஜாமணி குருக்கள் - தொ. பே. 9444220780
- P.N. மோகன் குருக்கள் - தொ. பே. 9444146752
- P.N. பாபு குருக்கள் - தொ. பே. 9841317500
- P.N. கணேஷ் குருக்கள் - தொ. பே. 9841344867
- P.N. கந்தன் குருக்கள் - தொ. பே. 9962570445